11.12.13

தில்லியில் மறுதேர்தல்?


தற்போது அரசு அமைக்க முடியாத நிலை உள்ளது. இது தில்லி மக்களுக்கும் எங்கள் கட்சிக்கும் ஒரு சோகமான சூழல். இதுபோன்ற நிலை நீடித்தால், மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. - ஹர்ஷ வர்த்தன் / நாங்கள் பாஜக அல்லது காங்கிரஸிடம் இருந்து ஆதரவு கோரவோ அல்லது கொடுக்கவோ தயாராக இல்லை. அதற்குப் பதில் மறு தேர்தலை சந்திக்கத் தயார். - அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு தினங்கள் ஆகியும், தொங்கு சட்டப்பேரவைக்குத் தீர்வு ஏற்படவில்லை. ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பலம் இல்லாத காரணத்தால், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. மேலும், மறு தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இரு கட்சிகளுமே இருப்பதால், தில்லியில் வாக்காளர்கள் மீண்டும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
மறுதேர்தலுக்குத் தயாராகிறது பாஜக: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக தில்லி பிரதேச பாஜக, சிரோமணி அகாலி தள எம்எல்ஏக்கள் கூட்டம், தில்லி பிரதேச பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் 31 பேரும், சிரோமணி அகாலி தள எம்எல்ஏ ஒருவரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைத் தலைவராக பாஜக முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ வர்த்தன் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தில்லியில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து நீடித்து வரும் இழுபறி நிலை குறித்து இக் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்களிடம் ஹர்ஷ வர்த்தன், தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல், கட்சியின் பாஜக தில்லி பிரதேச தேர்தல் பொறுப்பாளர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்தாலோசித்ததாகவும், அப்போது மறுதேர்தலை எதிர்கொள்ளத் தயாராகுமாறு பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஹர்ஷ வர்த்தன் கூறியதாவது:
"தற்போதைய சூழலில் அரசு அமைக்க முடியாத நிலை உள்ளது. இது தில்லி மக்களுக்கும் எங்கள் கட்சிக்கும் ஒரு சோகமான சூழல். ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைக்க எங்களிடம் போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை. இதுபோன்ற நிலை நீடித்தால், மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. தவறான வழிகள் மூலம் ஆட்சி அமைக்கவோ, அதற்காக ஆர்வம் காட்டவோ நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றுவோம்' என்றார் ஹர்ஷ் வர்தன்.
தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் கூறுகையில், "எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எந்தக் குதிரைப் பேரத்திலும், சட்டவிரோத வழிகளையும் பயன்படுத்தி ஆட்சி அமைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு தேர்தலும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்படுகிறது. இதனால், எந்தக் கட்சி ஆட்சி அமைத்திருந்தாலும் அது எங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவே இருந்திருக்கும். மறு தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக அதிக இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைக்கும் விஷயத்தில் கட்சி யார் ஆதரவையும் கோர முயற்சிக்காது. எங்களை ஆட்சி அமைக்குமாறு தில்லி துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தால், ஆட்சி அமைக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்' என்றார்.
ஆம் ஆத்மியும் தயாரில்லை: இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய அக்கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், தங்களது கட்சி மறு தேர்தலுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
"தற்போதுள்ள சூழலில் நாங்கள் பாஜக அல்லது காங்கிரஸிடம் இருந்து ஆதரவு கோரவோ அல்லது கொடுக்கவோ தயாராக இல்லை. அதற்குப் பதில் மறு தேர்தலை சந்திக்கத் தயார். மறு தேர்தல் நடந்தால் அது பாஜக-வுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கும்' என்றார்.
முதல் இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சி அமைக்கத் தயாராக இல்லாத சூழலில், தில்லியில் மறுதேர்தல் தவிர்க்க இயலாததாகி வருகிறது.
ஆம் ஆத்மிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ்
தில்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தருவதாக முதலில் கூறிய காங்கிரஸ், பின்னர் ஆதரவு தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தில்லி பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜ் பாப்பர், செவ்வாய்க்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இத் தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும்தான் மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர். எனவே, அவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஆட்சி அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன.
அதே போல பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்து மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
வாக்குறுதிப்படி, 30 முதல் 50 சதவீத அளவுக்கு மின்சாரக் கட்டணம் குறைப்பு, 750 லிட்டர் இலவசக் குடிநீர் உள்ளிட்டவை கிடைத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்' என்றார் ராஜ் பாப்பர்.
துணை நிலை ஆளுநர் தீவிர ஆலோசனை
தில்லி பிரதேச தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, அரசு அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதற்கட்டமாக சட்ட நிபுணர்களுடன் அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் டிசம்பர் 17-ஆம் தேதி முடிவடைகிறது. அதற்குள்ளாக தேர்தல் நடத்தி முடித்து தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்து விட்டது.
இந் நிலையில், புதிய அரசு அமைக்க பாஜக-வோ அதற்கு அடுத்த நிலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியோ ஆர்வம் காட்டவில்லை.
மேலும், முதல்வர் ஷீலா தீட்சித்தும் பதவியை ராஜிநாமா செய்து விட்டதால் முந்தைய சட்டப்பேரவையின் ஆயுளும் முடிவடைந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
ஆட்சி அமைக்க பாஜக, ஆம் ஆத்மி விருப்பம் தெரிவிக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய துணைநிலை ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment