11.12.13

கேரளத்தில் தமிழர்கள் நிலங்கள் பறிப்பு: கருணாநிதி கண்டனம்

கேரளத்தில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இலங்கையில் இருந்துதான் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடருகிறது என்றால், ஒரே இந்தியாவிலுள்ள கேரளத்திலும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை என்பது அதிர்ச்சியைத் தருகிறது.
கேரள மாநிலம் அட்டப்பாடியில் தமிழர்கள் விவசாயம் செய்து வருகின்ற நிலங்கள், பழங்குடி இன மக்களுக்குச் சொந்தமானவை என்றும், பழங்குடியினரின் நிலங்கள், அவர்களுக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழர்கள் தங்களின் நிலங்களை பழங்குடியினரிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும் கேரள அரசு கூறுகிறது.
பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கவில்லை.
கேரள அரசில் பணியாற்றும் சில அதிகாரிகள் தமிழர்களிடமிருந்து அந்த நிலங்களைப் பெற்று, பழங்குடியின மக்களிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்ற பெயரால், அவற்றை ஒருசில பெரிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியில்தான் சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
அதே கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்குச் சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் நிலங்களையெல்லாம் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் பறித்துக் கொண்டிருக்கின்றன.
அந்த நிலங்களைத் திரும்பப் பெற்று பழங்குடி இன மக்களுக்கு மீண்டும் வழங்க முயற்சி எடுக்காத கேரள அரசு, தமிழர்கள் வாழும் பகுதியிலே உள்ள நிலங்களை மட்டும் பறிக்க முயற்சிப்பது நியாயமான செயல் அல்ல.
எனவே தமிழக அரசு இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாகக் கவனித்து, கேரள அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து அட்டப்பாடியில் காலம் காலமாக இருந்து வரும் தமிழர்களைக் காப்பாற்றிட முன்வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment