11.12.13

சிவப்புச் சுழல் விளக்கை பயன்படுத்த கட்டுப்பாடு: உச்ச நீதிமன்றம்


சிவப்புச் சுழல் விளக்கை அரசியல் சாசனத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பதவி வகிப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப வரும் 3 மாதங்களுக்குள் உரிய சட்டத் திருத்தத்தை கொண்டு வருமாறும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சுழல் விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அபய்சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த உத்தரவில், ""சிவப்புச் சுழல் விளக்குகளை அரசியல் சாசனத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பதவி வகிப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நீல நிறச் சுழல் விளக்குகளை காவல்துறை மற்றும் பிற அவசர வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். எனினும், அவை எழுப்பும் ஓசையின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது'' என்று குறிப்பிட்டிருந்தனர். ""வாகனங்களில் சிவப்பு விளக்கு பொருத்திக் கொள்ளும் தகுதியுடைய முக்கியப் பிரமுகர்களின் பட்டியலை மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி விரிவாக்கம் செய்ய முடியாது. இந்த விஷயத்தில், காவல்துறையினர் அச்சமும் பாரபட்சமும் இன்றி கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும்'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment