11.12.13

தடம்புரண்டது திருச்சி-பாலக்காடு ரயில்: ஈரோடு அருகே திடீர் பரபரப்பு

ஈரோடு ரயில் நிலையத்துக்கு சற்று தூரத்துக்கு முன்பு திருச்சி-பாலக்காடு ரயில் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56847) திருச்சியில் இருந்து புதன்கிழமை பகல் 1 மணிக்கு புறப்பட்டது. சுமார் 3.55 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு முன்பு 100 மீ தொலைவில் வந்தபோது இந்த ரயில் ரயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்துக்குச் செல்லும் பாதைக்கு தடம் மாறியது.அப்போது திடீரென ரயில் இன்ஜீனும், முதல் பெட்டியும் தடம் புரண்டு கீழே சாய்ந்தன. இதையடுத்து ரயிலை ஓட்டுநர் உடனடியாக நிறுத்தினார். ரயில் தடம் புரண்டதை பார்த்த பயணிகள் அலறியடித்து ரயில் பெட்டிகளில் இருந்து கீழே குதித்து தப்பினர்.
தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப்படையினர், ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.மீட்பு ரயில் கொண்டுவரப்பட்டு தடம் புரண்ட பயணிகள் ரயில் எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த ரயில் தடம் புரண்டதால் ஈரோட்டில் இருந்து மாலை 6.20-க்கு புறப்பட வேண்டிய ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் சற்று காலதாமதமாக சென்றது.இதனால் கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பிற ரயில்களின் சேவை பாதிக்கப்படும் என்றும் சென்னை-கோவை, கோவை-சென்னை மார்க்கமாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்படாது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment