11.12.13

காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை



தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை; திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புது தில்லியில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஏற்கெனவே, மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெளிப்படுத்திவிட்டனர். எனவே, ஆந்திரத்தை பிரிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை.
சீமாந்திர பகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக திங்கள்கிழமை கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு, திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை மம்தா சந்தித்தார்.
இதனிடையே, ஆந்திர பிரிவினைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள சீமாந்திரா பகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு கோரினர்.
ஆனால், மத்திய அரசை காப்பாற்ற சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தயாராக உள்ள நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க இயலாது என்று அவர்களிடம் மம்தா கூறினார்.
இருப்பினும், ஆந்திர பிரிவினைக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர்களிடம் மம்தா தெரிவித்தார்.
ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலங்கானா உருவாக்குவதற்கு எதிராக சீமாந்திரா பகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் மற்றும் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸார் தனித்தனியே நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment