11.12.13

ஹசாரே, கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அண்ணா ஹசாரே, அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து விட்டது.
தில்லி பெருநகர நடுவர்மன்ற நீதிமன்றத்தில் "ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தை சேர்ந்த ருமால் சிங் என்பவர், அண்ணா ஹசாரே, அரவிந்த் கேஜரிவால், கிரண் பேடி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் அண்ணா எஸ்.எம்.எஸ். அட்டைகளை 4 கோடி பேரிடம் விற்பனை செய்து 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து போலீஸாரிடம் தாம் புகார் அளித்தபோது, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே அண்ணா ஹசாரே, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
தில்லி பெருநகர நடுவர்மன்ற நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில், ஹசாரே உள்ளிட்டோர் எந்தத் தவறும் புரியவில்லை என்றும், இதுதொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும்படி ருமால் சிங்கை தாங்கள் கேட்டுக் கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிமன்றம், அண்ணா ஹசாரே, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

No comments:

Post a Comment