20.12.13

திருச்சியில் பிப்ரவரி 15, 16-இல் திமுக மாநில மாநாடு

திருச்சியில் பிப்ரவரி 15,16-ஆம் தேதிகளில் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
அந்த மாநாட்டில் மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் இடம்பெறும் கட்சிகளின் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கருணாநிதி கூறினார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 92-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கருணாநிதி பேசியது: மக்களவைத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பதை முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தை எனக்கும் (கருணாநிதி), அன்பழகனுக்கும் பொதுக்குழு வழங்கியுள்ளது.
ஆனால் அந்த அதிகாரத்தை நாங்கள் துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம். எங்களுக்கு அதிகாரம் அளித்தாலும், திமுகவினர் கருத்தையும் அறிவோம். அப்படி அறிவதற்காக பிப்ரவரி 15, 16-ஆம் தேதிகளில் திருச்சியில் திமுகவின் மாநில மாநாட்டை நடத்த உள்ளோம்.
திருச்சியைப் பொருத்தவரை அந்த இடத்தில் மக்களைக் கூட்டி, திமுக எடுத்த எந்த முடிவும் வீண் போகவில்லை.
அண்ணா காலத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் திமுக தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்று கூடியிருந்த மக்களிடம் கேள்வி எழுப்பி, ஒரு பெட்டியில் வாக்களிக்கச் செய்தோம்.
அதற்கு மக்கள் வாக்களித்ததில் தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கே அதிக வாக்குகள் கிடைத்தன.
அதன் அடிப்படையில்தான் திமுக தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டது.
அந்த மாநாட்டில்தான் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களை முழங்கினோம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்வோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று முழங்கினோம்.
அந்த இடத்தில் மீண்டும் மாநில மாநாட்டை நடத்த உள்ளோம். அந்த மாநாட்டுக்கு திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்றார் கருணாநிதி.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகியோர் க.அன்பழகனை வாழ்த்திப் பேசினர்.
க.அன்பழகன் ஏற்புரை வழங்கினார்.
கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

No comments:

Post a Comment