20.12.13

தொடங்கியது காங்கிரஸ் கோஷ்டி மோதல்


தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கான முதல் கூட்டத்திலேயே வாசன் - தங்கபாலு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்தது.

முக்கியத் தலைவர்களை அழைக்கவில்லை எனக் கூறி தங்கபாலு ஆதரவாளர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தமிழக காங்கிரஸýக்கு 17 மாநில துணைத் தலைவர்கள், 29 மாநிலப் பொதுச்செயலாளர்கள், 43 மாநில செயற்குழு உறுப்பினர்கள், 55 மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
நிர்வாகிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாசன் ஆதரவாளர்கள். அதற்கடுத்து தங்கபாலு, ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.
புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் தங்கபாலு ஆதரவாளர்களான மாநில துணைத் தலைவர்கள் டி. சதாசிவலிங்கம், ஆர். தாமோதரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆர்.கே. வெங்கட் உள்ளிட்டோர் எழுந்து நின்று தங்கபாலுவை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி கோஷமிட்டனர். அவர்களை மாநிலத் தலைவர் ஞானதேசிகன் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்கள் கோஷமிட்டவாறு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வாசன் ஆதரவு நிர்வாகிகள், முதல் கூட்டத்திலேயே மோதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக அனைவரும் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தனர்.
ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு:
கூட்டத்தில் ப. சிதம்பரம் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், சிதம்பரம் ஆதரவாளரான தாம்பரம் நாராயணன் கலந்து கொண்டார். அதுபோல, தங்கபாலு ஆதரவாளரான திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் சுப. சோமுவும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியது: மாநிலத் தலைவர் என்ற முறையில் புதிய நிர்வாகிகளுடன் சாதாரண முறையில் கலந்துரையாடவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால்தான் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் அனைவரும் பங்கேற்பார்கள்.
நான் ஒருதலைபட்சமாக முடிவு எடுப்பவன் அல்ல. எல்லோரையும் மரியாதையுடன் அழைத்துப் பேசுபவன். எல்லோருக்கும் பதவிகள் கொடுப்பது சாத்தியமல்ல. பதவிகள் கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. யாருக்காவது குறைகள் இருந்தால் மேலிடத்தில் முறையிடலாம். அதற்கான வாய்ப்புகள் காங்கிரஸில் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் கூட்டத்தில் இருந்து சிலர் வெளிநடப்பு செய்திருப்பது வருத்தமளிக்கிறது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடத்துடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றாôர் ஞானதேசிகன்.
மாநில துணைத் தலைவர் ஞானசேகரன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் கே. சிரஞ்சீவி, நாசே ராமச்சந்திரன், விடியல் சேகர், சி.டி. மெய்யப்பன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கிராமங்கள் தோறும் காங்கிரஸ்
காங்கிரஸின் 129-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு டிசம்பர் 28-ஆம் தேதி "கிராமங்கள்தோறும் காங்கிரஸ்' என்ற பெயரில் அனைத்து கிராமங்களிலும் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜனவரி மாதத்திலிருந்து தேர்தல் பணிகள் தொடங்கும். வட்டார அளவில் மாதத்துக்கு இரண்டு பொதுக்கூட்டங்கள், மாதத்தின் 2-ஆவது சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வட்டார, மாவட்ட செயற்குழுக் கூட்டங்களை நடத்தி அதன் விவரங்களை மாநிலத் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜனவரி முதல் மாவட்டவாரியாக நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களும் செயற்குழுவில் இடம் அளிக்க வேண்டும் என என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நியாயமான கோரிக்கை. இது குறித்து மேலிடத்தில் பேசி அவர்களை செயற்குழுவில் இணைக்க முயற்சி மேற்கொள்வேன் என்றார் ஞானதேசிகன்.

No comments:

Post a Comment