20.12.13

ஆம் ஆத்மிக்கு மேலும் சில நாள் அவகாசம்: உள்துறை அமைச்சர் தகவல்


தில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் சில நாள்கள் அவகாசம் அளிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே வியாழக்கிழமை தெரிவித்தார்.

தில்லி பிரதேச சட்டப் பேரவைக்கு டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, 8-ஆம் தேதி முடிவு வெளியானது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 28 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் இரண்டாவது தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க, 8 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது.
ஆனால், ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் ஆம் ஆத்மியின் 18 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். ஆட்சி அமைக்க பத்து நாள் அவகாசம் தேவை என்றும் துணை நிலை ஆளுநரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி அனுப்பிய கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சி பதில்
அளித்தது. அதன்பிறகும் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதில் விருப்பம் காட்டாமல் காங்கிரஸ் கட்சி அளித்த பதில்களை மக்கள் சபைகளில் முன்வைக்கப் போவதாக அறிவித்தது. ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்தை டிசம்பர் 22-ஆம் தேதி வரை கேட்கவும் அக் கட்சி முடிவு செய்திருக்கிறது. இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த பரிந்துரை மீது மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது என்று தெரிகிறது.
இந் நிலையில், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே, "இது ஒரு ஜனநாயக நடைமுறை விஷயம் சார்ந்தது. அதனால், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் சில தினங்கள் அவகாசம் கொடுப்போம்' என்று தெரிவித்தார்.
சுஷீல்குமார் ஷிண்டே கருத்தால், டிசம்பர் 23-ஆம் தேதிக்குப் பிறகே துணை நிலை ஆளுநரின் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment