20.12.13

உளவு பார்த்ததாக ராணுவ முன்னாள் அதிகாரி கைது

வெளிநாட்டு உளவுப் பிரிவுக்கு வேவு பார்த்ததாக இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி மதன் மோகன் பால் (53) என்பவரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க போலீஸ் துணை ஆணையர் தேபசிஷ் பைஜி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருந்து 2008ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மதன் மோகன் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளுக்கு வேவு பார்ப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கண்காணித்து வந்தோம்.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அருகே உள்ள பாரக்பூரில் புதன்கிழமை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 13 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகள் பதிவாகியுள்ளன. ராணுவத்தின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ கேன்டின்களுக்கு சென்று தகவல் சேகரித்து அவர் வேவு பார்த்துள்ளார். விசாரணையில் அவர் இந்தியாவின் உளவு அமைப்பான "ரா'வுக்கு பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment