20.12.13

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: கந்தமாலில் பலத்த பாதுகாப்பு

ஒடிஸாவில் பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை அமைதியான முறையில் மக்கள் கொண்டாடுவதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விழா கொண்டாட்டத்தின்போது சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க பதற்றம் நிலவும் பகுதிகளில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பி.சிங் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற அமைதிக் குழுக் கூட்டம் கந்தமாலில் புதன்கிழமை நடந்தது. சார்-கோட்டங்கள், தாலுகாக்கள், மத ரீதியில் பதற்றமுள்ள சில கிராமங்களிலும் இதேபோல அமைதிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக கந்தமால் மாவட்ட ஆட்சியர் என்.திருமல்லா நாயக் கூறினார்.
வரும் டிச.24ஆம் தேதி இரவு நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனைக் கூட்டத்துக்காக அனைத்து தேவாலயங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ஆட்சியர் குறிப்பிட்டார்.
கடந்த 2008 ஆகஸ்ட் 23-ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்த சரஸ்வதியும் அவரது சீடர்கள் நால்வரும் விஷமிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, கந்தமால் மாவட்டத்தில் பெரிய அளவில் வன்முறை நடந்தது. பல தேவாலயங்களுக்குத் தீவைக்கப்பட்டன.

No comments:

Post a Comment