20.12.13

துணைத் தூதர் மீதான வழக்கை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்


அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை எவ்வித நிபந்தனையுமின்றி அந் நாட்டு அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். அதே சமயம், தேவயானி கைது விவகாரத்தால் இந்திய - அமெரிக்க நல்லுறவில் விரிசல் ஏற்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

வீட்டு வேலைக்குப் பணிப்பெண்ணை அமர்த்தியதில் விசா முறைகேடு செய்ததாக தேவயானி மீது அமெரிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் வேலை செய்த அப் பெண் அளித்த புகாரின் பேரில் தேவயானியை கடந்த வாரம் அமெரிக்க போலீஸ் கைது செய்தது. அவருக்கு அமெரிக்கப் போலீஸார் கைவிலங்கு பூட்டியது மட்டுமின்றி ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியதுடன் போதைப் பொருள் கைதிகளுடன் சிறையில் அடைத்ததால் பரபரப்பு எழுந்தது.
இந்தியத் துணைத் தூதரான தேவயானி மோசமான முறையில் கைது செய்யப்பட்டதற்கும், தூதரக அதிகாரிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ரீதியிலான சலுகையை அமெரிக்க அரசு மறுத்துள்ளதற்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேவயானி கைது விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அமெரிக்க அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதன் விளைவாக தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வழங்கப்பட்டு வந்த விசேஷ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந் நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த அழைப்பை சல்மான் குர்ஷித் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை ஜான் கெர்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமெரிக்காவில் இந்திய துணைத் தூதருக்கு நேர்ந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
வழக்கை வாபஸ் பெற வேண்டும்: இத் தகவலை தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசியபோது சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:
"அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி என்னைத் தொலைபேசியில் அழைத்த போது அவரது அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருந்தேன். ஆனால், நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனுடன் அவர் பேசிய போது இந்தியாவின் கவலை ஜான் கெர்ரியிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இந்தியத் துணைத் தூதர் கைது விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிய மத்திய அரசு விரும்புகிறது. தேவயானி மீதான வழக்கு தொடர்பான முழு விவரங்களை அமெரிக்காவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். வியன்னா மாநாட்டில் தூதரக அதிகாரிகளுக்கான சலுகைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதை மதித்து அமெரிக்கா செயல்பட வேண்டும். தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும்.
அதேநேரத்தில் இந்திய-அமெரிக்க உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் இந்தப் பிரச்னையை கவனத்துடன் அணுக வேண்டும்' என்றார் சல்மான் குர்ஷித்.
மன்னிப்புக் கேட்க வேண்டும்: இதற்கிடையே, "இந்திய துணைத் தூதர் தேவயானிக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு காலம் கடந்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல் நாத் கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகையில் "இந்திய அதிகாரிக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வுகள் திருப்தியளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தவறு செய்ததை அமெரிக்கா வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்றார்.
பாஜக கண்டனம்: தேவயானி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், "தவறு செய்து விட்டு வருத்தம் தெரிவித்தால் போதுமா? இந்தியாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கு அத்தகைய அவமதிப்பை நமது காவல் துறை செய்தால் அதை அந் நாட்டு அரசு பொறுத்துக் கொள்ளுமா?' என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவின் செயலை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்திய குடிமக்கள் அவ்வளவு சாதாரணமாக அமெரிக்கா செல்ல முடியாது. அதற்கு ஏராளமான விசா நடைமுறைகள் உள்ளன. ஆனால், தேவயானி மீது புகார் கூறியுள்ள அவரது பணிப்பெண் குடும்பத்தாருக்கு அவசர, அவசரமாக அமெரிக்க அரசு விசா அளித்துள்ளது. இதில் இருந்தே இந்த விவகாரத்தில் ஏதோ சதி மறைந்திருப்பது தெளிவாகிறது. அதை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்' என்றார்.
அமெரிக்க அரசு வழக்குரைஞருக்கு கண்டனம்
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க அரசு வழக்குரைஞர் பிரீத் பராராவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்களை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
"இந்தப் பிரச்னை தொடர்பான வழக்கு இந்திய நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதை அறிந்த பின்னரும், தலைமறைவாக உள்ள பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட் குடும்பத்தினரை இந்தியாவில் இருந்து அவசரமாக வெளியேற்றி அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது ஏன்?
இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இவ்வாறு ரிச்சர்ட் குடும்பத்தினரை அழைத்துச் சென்றது குறித்து பராரா கூறியுள்ள விளக்கம் இந்திய நீதித்துறையை அவமதிப்பதைப்போல் உள்ளது.
தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் சிறப்பு உரிமைகள் தொடர்பாக வியன்னா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் தேவயானி கைதில் பின்பற்றப்படவில்லை.
இதன் மூலம் தவறான முறையில் தேவயானி கைது செய்யப்பட்ட விவகாரத்தை பராரா நியாயப்படுத்தி வருகின்றார்' என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment