20.12.13

புயலுடன் பயணித்து தகவல்களைத் தரும் நவீன சாதனம்

இந்தியக் கடல் பகுதிகளில் புயல் மற்றும் கடல் மாற்றங்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் மிதவை சாதனங்கள்(கோப்புப்படம்).

இந்தியக் கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களை துல்லியமாகக் கணிப்பதற்காக, ரோபோ தொழில்நுட்பத்திலான நவீன சாதனம் ஒன்றை வடிவமைக்க தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
"கிளைடர்' என அழைக்கப்படும் இந்த நவீன சாதனம், புயல் செல்லும் பாதையில் பயணித்து, அங்கிருந்து வானிலை மையத்துக்கு உடனுக்குடன் தகவல்களைத் தரும்.
உலகிலேயே அமெரிக்காவில் மட்டுமே இந்த கிளைடர் சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கிளைடர் சாதனத்தை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மிதவை சாதனங்கள்: இந்தியக் கடல் பகுதிகளில் buoy  என அழைக்கப்படும் மிதவை சாதனங்கள் மூலமாக தற்போது புயல் மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்கள் கணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இந்திய கடலில் 14 மிதவை சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2 மீட்டர் விட்டம் கொண்ட மிதவை சாதனங்களின் கீழ் பகுதியில் கேபிள்கள் இணைக்கப்பட்டிருக்கும். கடலுக்குள் 2000 - 3000 மீட்டர் ஆழம் வரை இந்த கேபிள்கள் செல்லும்.
இதன் மூலம் காற்றின் வேகம், அலையின் வேகம், நீரின் அடர்த்தி, தட்பவெப்பம் ஆகியவற்றை கணிக்க முடியும்.
இதில் இருந்து பெறப்படும் தகவல்கள் சாட்டிலைட் மூலம் வானிலை மையத்துக்கு அனுப்பப்படும்.
ரேடார் சாதனங்கள்: இதைத் தவிர உயர் அலைவரிசை ரேடார் சாதனங்களும் கடல் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 5 இடங்களில் இந்த ரேடார் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோபால்பூர், கடலூர், அந்தமான், குஜராத் உள்ளிட்ட இடங்களில் ரேடார் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் கடல் நீரோட்டத்தின் வேகத்தை அளவிட முடியும். இதைத் தவிர, கடல் மட்டத்திலிருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் உள்ள இன்சாட் சாட்டிலைட் மூலமாக கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அரை மணிநேரத்துக்கு ஒரு முறை புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் வானிலை மையத்துக்கு அனுப்பப்படுகின்றன. இந்த சாதனங்களின் உதவியுடன்தான் நிலம், மகாசேன், பைலின், ஹெலன், லெஹர், மாதி உள்ளிட்ட புயல்களை சரியாகக் கணித்து முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இருப்பினும் இதை விட அதிநவீன தொழில்நுட்ப சாதனமான கிளைடர் மூலம் மிகத்துல்லியமாக புயலைக் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
கிளைடர் சாதனம்: அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வரும் கிளைடர் சாதனம், ஒரு குட்டி விமானத்தைப் போல இருக்கும். புயல் செல்லும் பாதையில் கடலுக்கு மேலும், கடலுக்கு அடியிலும் இந்த கிளைடர் சாதனம் பயணிக்கும். இதன் மூலம் புயலின் வேகம், கடலின் அடர்த்தி, தட்பவெப்பம் உள்ளிட்டவற்றை துல்லியமாக கணிக்கலாம்.
மேலும் கிளைடர் சாதனம் புயலுடன் பயணிப்பதால் எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.
இந்த சாதனத்தை இந்தியக் கடலில் பயன்படுத்துவதற்கான ஆய்வுப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இது வடிவமைக்கப்பட உள்ளதாக தேசிய கடல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment