18.12.13

டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு விசாரணை: 4 நாள் போலீஸ் காவலில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில்

வேலூரில் கடந்த ஆண்டில் கொலை செய்யப்பட்ட பாஜக மாநில மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு விசாரணைக்காக தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் 4 நாள் போலீஸ் காவலில் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருவரையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்ல அனுமதித்த நீதிமன்றம், 20-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.
வேலூரில் கடந்த ஆண்டு ஆயுத பூஜை அன்று பாஜக மாநில மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த்ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தேடப்பட்ட தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன்ன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, காவலில் எடுத்து இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்டபோது, இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களை கொலை செய்த சம்பவங்களில் கடந்த ஆண்டில் அரவிந்த் ரெட்டி கொலையையும் இவர்கள் செய்துள்ளது தெரியவந்தது.
வெள்ளையப்பன் கொலை வழக்கு விசாரணை இறுதி வடிவம் எட்டியுள்ளதை அடுத்து அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு விசாரணைக்கு ஆயத்தமான வேலூர் சிபிசிஐடி போலீஸார் இக்கொலை வழக்கில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சட்டரீதியாக திங்கள்கிழமை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களை தனித் தனியாக வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3-ல் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆஜர்படுத்தினர். அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு விசாரணைக்காக 7 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதி கோரினர்.
மாஜிஸ்திரேட் சிவக்குமார், இருவரையும் செவ்வாய்க்கிழமை உள்பட 4 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதித்தார். இருவரையும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு (20-ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக போலீஸ் பக்ருதீன் பிற்பகல் 1 மணிக்கு நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்தியச் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு 3 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோல் பிலால் மாலிக் 3 மணிக்கு அழைத்து வரப்பட்டு 4 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார்.
சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி, டிஎஸ்பிக்கள் மதிவாணன், மணியன் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
7 பேர் விடுவிப்பு எப்போது
அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு இவர்கள் மீதான கொலை குற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகு ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவர் என தெரிகிறது.

No comments:

Post a Comment