18.12.13

தமிழ் படத்தில் நடிக்கத் தயார்: சென்னையில் அமீர்கான் பேட்டி


அமீர்கான், அபிஷேக் பச்சன், உதய்சோப்ரா, கத்ரீனா கைப் நடித்த தூம் 3 படம் வருகிற 20ந் தேதி ரிலீசாகிறது. தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.
படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் நேற்று (டிசம்பர் 17) சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள 7 நட்டசத்திர ஓட்டலில் அவர்கள் சென்னை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அமீர்கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:
* நேரடி தமிழ் படத்தில் நடிப்பீர்களா?
பொதுவாகவே தெரியாத மொழிகளில் நடிப்பதில் எனக்கு தயக்கம் உண்டு. தமிழ் மொழி தெரியாது. ஆனாலும் நடிக்க ஆசை இருக்கிறது. தமிழ் கதையில் தமிழ் மொழி பேசாத ஒரு கேரக்டர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.
* தமிழ் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக இருந்தால் எந்த படத்தை தேர்வு செய்வீர்கள்?
கஜினி ரீமேக்கில் நடித்தேன். தமிழ் கஜினியில் சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். அந்த அளவுக்கு நடிக்க முடியுமா என்று பயந்தேன். சூர்யாவிடமே கேட்டேன். அவர்தான் உங்களால் நிச்சயம் நடிக்க முடியும். கண்டிப்பாக நடியுங்கள் என்றார். நான் நடித்த முதல் பழிவாங்கும் படம் அதுதான். அன்று சூர்யா தைரியம் சொல்லியிருக்காவிட்டால் நான் நடித்திருக்க மாட்டேன். இப்போது எந்த படத்தை ரீமேக் செய்தால் நடிக்கலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி எந்த ஐடியாவும் இல்லை.
* கே.பாலச்சந்தரை சந்தித்தது ஏன்?
தாரே ஜமீன்பர் படத்தில் நடித்ததற்காக சென்னையில் எனக்கு விருது வழங்கினார்கள். அந்த விருதை வழங்கியவர் கே.பாலச்சந்தர். அப்போது அவர் என்னை மிகவும் பாராட்டினார் தென்னிந்தியாவின் லெஜண்ட் ஒருத்தர் பாராட்டும்போது நான் கண்கலங்கி விட்டேன். அவர் மீது ஒரு இனம் புரியாத அன்பு உண்டாகி விட்டது. அதனால் அவரை சந்தித்தேன். தூம் 3 படம் வெற்றி பெற வாழ்த்துச் சொன்னார்.
* தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். அவர் இந்தியில் நடித்த உத்தர்தக்ஷன், கிராப்தார் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். ஆதங்கி ஆங் என்ற படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தேன். அப்போது அவரைக் கண்டாலே எனக்கு பயம். என்னை தைரியப்படுத்தி நடிக்க வைத்தார். அவரது நேரந்தவறாமை, எளிமை, மனிதாபிமானம், தனிமனித ஒழுக்கம் எல்லாமே எனக்குப் பிடிக்கும்.
* தூம் 3 தமிழில் ரிலீஸ் ஆவதை எப்படி உணருகிறீர்கள்?
தூம் 3 படத்தில் சர்க்கஸ் கலைஞனாக நடிக்கிறேன். நான்தான் வில்லன். தமிழ்நாட்டில் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். என் இந்திப் படங்களை அவர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இப்போது முதன் முறையாக என் படம் தமிழில் டப் செய்யப்படுவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழில் முதல் படம் என்பதை என்னை ஒரு புது நடிகனைப்போல உணர்கிறேன்.
* உங்களின் எல்லா படங்களும் ஹிட்டாகிறதே எப்படி?
நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் முக்கியமானது. என் படங்களையும், அதில் நான் ஏற்கும் கேரக்டர்களையும் அதிகமாக நேசிக்கிறேன். அதிக ஈடுபாட்டோடு எனது பணியைச் செய்கிறேன்.
* தென்னிந்திய கலைஞர்கள் இந்தியில் சாதிப்பது பற்றி…?
தென்னிந்திய கலைஞர்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ், ரவி.கே.சந்திரன் போன்றவர்கள் அங்கு வந்து சாதித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment