18.12.13

தூதரக அதிகாரிகளின் சலுகைகள் பறிப்பு: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

தில்லியில் உள்ள அமெரிக்க நாட்டுத் தூதரகத்துக்கு வெளியே உள்ள பாதுகாப்புத் தடுப்புகளை அகற்றும் போலீஸார். நாள்: செவ்வாய்க்கிழமை.


அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதற்குப் பதிலடியாக அந்நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கான பல்வேறு சலுகைகளை மத்திய அரசு பறித்துள்ளது.

பணிப்பெண்ணுக்கு உரிய ஊதியம் வழங்காதது, அவருக்கு முறைகேடாக விசா பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பெண் அதிகாரியான அவர் கைவிலங்கிட்டுக் கைது செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் செயலுக்குப் பதிலடியாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. முதற்கட்டமாக, நம் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் தங்களிடம் உள்ள அடையாள அட்டைகளை உடனடியாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் விமான நிலைய அனுமதிச்சீட்டுகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தூதரகங்களில் பணியாற்றும் இந்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் மத்திய அரசு கோரியுள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ""அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் தங்களிடம் உள்ள அடையாள அட்டைகளை உடனடியாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நமது தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அட்டைகளைப் பொருத்து, அவற்றின் தரம் குறைக்கப்படும்'' என்று தெரிவித்தன.
மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் அமெரிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் விசா தொடர்பான தகவல்களையும், இந்தப் பள்ளிகளில் இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களையும் வழங்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது.
இந்த நடவடிக்கைகளைத் தவிர, மதுபான வகைகள் உள்பட பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கத் தூதரகத்துக்கு அனுமதி அளிப்பதையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
தில்லி நியாயா மார்க் பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே உள்ள பாதுகாப்புத் தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.

அமெரிக்க எம்.பி.க்களுடனான சந்திப்பை ரத்து செய்த ஷிண்டே, மோடி, ராகுல்

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து வந்துள்ள 5 எம்.பி.க்களுடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்தார். முன்னதாக, இதே காரணத்துக்காக அமெரிக்க எம்.பி.க்கள் குழுவினருடனான சந்திப்பை மக்களவைத் தலைவர் மீரா குமார் திங்கள்கிழமை ரத்து செய்தார். இக்குழுவினரைச் சந்திப்பதாக இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் அவர்களைச் சந்திக்கவில்லை.
இந்திய துணைத் தூதர் தேவயானியை அமெரிக்கா நடத்திய விதத்தைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்க எம்.பி.க்களுடனான தனது சந்திப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திங்கள்கிழமை ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க எம்.பி.க்கள் குழு புதன்கிழமை ஆமதாபாத் சென்று மாநில முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும், அமெரிக்காவில் இந்திய துணைத் தூதரை கண்ணியக்குறைவாக நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு எம்.பி.க்களைச் சந்திக்க முதல்வர் மோடி மறுத்து விட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

விதிமுறையை பின்பற்றியே இந்திய துணைத் தூதர் கைது: அமெரிக்கா

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "வியன்னா தீர்மானத்தின்படி, தூதரக ரீதியான பிரச்னைகளுக்கு மட்டுமே அமெரிக்க சட்டத்திலிருந்து சில விதிவிலக்குகளை அளிக்க வழிவகை உள்ளது. தனிநபர் என்ற முறையில் குற்றம்சாட்டப்பட்டு தேவயானிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது' என்றார்.

No comments:

Post a Comment