18.12.13

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலை சுற்றிப்பார்த்து வியந்த வெளிநாட்டவர்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலை 90 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்து செவ்வாய்க்கிழமை வியந்து பாராட்டினர்.
 வாயேஜர் எனும் கப்பலில் இங்கிலாந்திலிருந்து சுமார் 364 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாட்டவரும் இதில் அடங்குவர். அவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தர், மும்பை, கோவா வழியாக தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கினர். அவர்களில் 90 பேர் மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலைப் பார்க்க விரும்பி வந்தனர்.
  பகல் 12 மணிக்குமேல் கோயில் நடை சார்த்தப்பட்டது. ஆனால், அவர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. கிழக்குக் கோபுர வாசலில் மதுரை டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா, செயலர் செந்தில்நாதன் ஆகியோர் மல்லிகைப் பூ அளித்து வரவேற்றனர். திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் வெளிநாட்டவரை அழைத்துச்சென்றார்.
   கிழக்குவாசல் தூண் சிற்பங்கள், மேற்கூரை ஓவியங்களை கண்டு வெளிநாட்டவர் வியந்தனர். பொற்றாமரைக் குளத்தைப் பார்த்த அவர்கள், அதன் சிறப்பையும்,  புராண வரலாற்றையும் கேட்டறிந்து அதிசயித்தனர். முக்குருணி விநாயகர் சிலையைக் கண்டு தரிசித்தனர். கம்பத்தடி மண்டபம் சென்று கோயில் கொடிமரத்தையும், சிற்பச் சிலைகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.  ஆயிரங்கால் மண்டபத்துக்கும் சென்று பார்வையிட்டனர். அப்போது கோயில் கலை சிற்பங்கள் தங்களை அதிசயிக்க வைப்பதாகக் கூறினர்.
  பின்னர் திருமலை நாயக்கர் மகாலுக்குச் சென்றனர். அங்கு உயர்ந்த கோபுரங்களையும், மாடங்களையும் கண்டு வியந்தவர்கள், மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிலைகளையும் பார்த்துச்சென்றனர்.
  முன்னதாக கிழக்குச் சித்திரை வீதியில் சாலையோரத்தில் பொருள் விற்போரிடமும், நரிக்குறவர்களிடமும் பொருள்களை வாங்கினர்.   லண்டனைச் சேர்ந்த ஜுதைஸ் என்ற பெண் கூறுகையில், நான் தேர்தல் அலுவலராக பணிபுரிகிறேன். முதன்முறையாக இந்தியா வந்துள்ளேன்.
  மதுரையில் வழிபாட்டுத்தலம் இவ்வளவு கலை நுணுக்கத்துடன் பிரமாண்டமாக இருப்பது வியப்பாக உள்ளது என்றார்.  இதே கருத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ரோ மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏஞ்சலா உள்ளிட்டோரும் தெரிவித்தனர்.
கெடுபிடி செய்வது தவிர்க்கப்படுமா?
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், பாரம்பரியமிக்க கோயிலின் விழாக்களை மக்களுக்கு தெரிவிக்கவும், திருக்கோயில் சிறப்பையும், கோயிலின் பாரம்பரியம், கலாசாரத்தை இளைய தலைமுறையினர் அறியவும் கோயில் செய்திகள் அவசியம்.
 ஆனால், பாதுகாப்பு எனும் பெயரில் கோயில் முக்கிய நிகழ்ச்சிகளிலும், கோயிலின் பெருமையை வெளிநாட்டவரிடம் கேட்டு, அதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வரும் பத்திரிகையாளர்களை தடுப்பது சரியல்ல.

No comments:

Post a Comment