16.12.13

ஆன்லைனில் போலி மருந்து: சீனாவில் 1,300 பேர் கைது


சீனாவில் சட்ட விரோதமாக ஆன்லைனில் போலி மருந்துகளை விற்பனை செய்த 1,300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சீனாவில் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் போலியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீஸார் தனிப்பிரிவு அமைத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மாகாண அளவில் தனிப்பிரிவு போலீஸார் நடத்திய 29 சோதனைகளில், அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 140 இணையதளங்களும், ஆன்லைன் விற்பனை மையங்களும் மூடப்பட்டன.
மேலும், போலி மருந்துகள் தயாரிப்பதற்காக வைத்திருந்த 9 டன் மூலப்பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கெட்டுப்போன பொருள்கள் மற்றும் மாவுகளைக் கொண்டு இந்த போலி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
சட்ட விரோத ஆன்லைன் விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் மக்களைக் கவர்ந்து போலி மருந்துகளை விற்பனை செய்கின்றனர்.
இந்த மருந்துகளை உட்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment