16.12.13

தென் ஆப்பிரிக்க மக்கள் கண்ணீர்: ராணுவ மரியாதையுடன் மண்டேலா உடல் அடக்கம்

 தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது,  அந்த நாட்டு கொடிகளுடன் கல்லறையின் மேல்பகுதியை வட்டமிட்ட 3 ஹெலிகாப்டர்கள்.
நல்லடக்க பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசும் மலாவி நாட்டு அதிபர் ஜாய்ஸ் பாண்டா.
நல்லடக்கம் செய்யப்பட்டபோது, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் தென் ஆப்பிரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள்.



தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரும், நிற வெறியை ஒழிக்கப் போராடியவருமான நெல்சன் மண்டேலாவின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான க்யுனு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தென் அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள க்யுனு கிராமத்தில் "தெம்பு' இன பழங்குடியின குடும்பத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த நெல்சன் மண்டேலா, வெள்ளையர்களின் நிற வெறிக்கு எதிராகப் போராடியதால் 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் மனம் தளராமல் உறுதியுடன் போராடி தென் ஆப்பிரிக்காவில் ஜனநாயக ஆட்சியை மலரச் செய்தார். 1994ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின அதிபராக மண்டேலா பதவி ஏற்றார்.
இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 5ஆம் தேதி தனது 95ஆவது வயதில் மரணமடைந்தார். இதையடுத்து அரசு சார்பில் 10 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட உலகத் தலைவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மண்டேலாவுக்கு புகழஞ்சலி சூட்டினர்.
பாரம்பரிய சடங்கு: அதைத்தொடர்ந்து மண்டேலாவின் உடல் நல்லடக்கத்துக்காக விமானம் மூலம் சனிக்கிழமை க்யுனு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் மண்டேலாவின் இறுதிச் சடங்கு இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு துவங்கியது. அவரது வயதைக் குறிக்கும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் அங்கு ஏற்றப்பட்டிருந்தன.
தேசியக் கொடியால் மூடப்பட்டு அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை, மண்டேலாவின் வீட்டில் இருந்து அடக்க ஸ்தலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரத்யேக வெண்ணிற குடிலுக்கு ராணுவ வீரர்கள் சுமந்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. மண்டேலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க "தெம்பு' இன பாரம்பரியப்படி அவரது இறுதிச்சடங்கை நிறைவேற்றினர். பழங்குடியினர் வழக்கப்படி எருமை மாடு பலியிடப்பட்டது.
ஸýஸô என்ற பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் பாடல்களும், கவிதைகளும் பாடப்பட்டன. குடும்பத்தினர் கருப்பு நிற ஆடையணிந்திருந்தனர்.
பின்னர், மண்டேலாவின் மனைவி கிரகா மிஷெல், முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மற்றும் நெருங்கிய உறவினர்கள் 450 பேர் மட்டும் நல்லடக்கத்தின்போது அருகில் இருந்தனர்.
4,500 பேர் வருகை: இதற்கிடையே, அந்த நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் மண்டேலாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியைக்காண அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், ஈரான் துணை அதிபர் முகமது ஷிரியாத் மதாரி, மண்டேலாவின் நீண்டகால நண்பரான ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்பட 4,500க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.
தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா பேசுகையில், ""மண்டேலாவின் தனித்துவ மிக்க 95 ஆண்டு கால பயணம் முடிவு பெற்றது'' என்றார்.

No comments:

Post a Comment