16.12.13

குஜராத் கலவரம்: மோடி-வாஜ்பாய் கடித விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு



குஜராத் கலவரம் நடைபெற்ற சமயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மாநில முதல்வர் நரேந்திர மோடி இடையேயான தகவல் பரிமாற்ற விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.
குஜராத்தில் கலவரம் நடைபெற்ற சமயத்தில் வாஜ்பாய் மற்றும் மோடி இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றங்களின் நகல்களையும், கலவரத்திற்கு பின்னர், அதாவது 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதிவரை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பற்றி பிரதமர் அலுவலகத்துக்கும் குஜராத் அரசுக்கும் இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றங்களின் நகல்களையும் வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பதாரர் கேட்டிருந்தார்.
இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்கையில், "தகவல் உரிமை சட்டப்பிரிவு 8(1)(எச்)-இன்படி, ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும்போதோ அல்லது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதோ, அது குறித்த தகவலை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.
8(1)(எச்) என்ற பிரிவின் கீழ் மனுவை நிராகரித்தாலும், மனுதாரர் கோரும் தகவல்கள் எவ்வாறு அந்த சட்டப்பிரிவின் கீழ் அடங்கும் என்பதை தெளிவாகக் கூறவேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள போதிலும், மேற்கண்ட மனுவுக்கான பதிலில் அவ்வாறு பிரதமர் அலுவலகம் விளக்கம் தரவில்லை.
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதையடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த சமயத்தில், ராஜ தர்மத்தைக் கடைபிடிக்கும்படியும், ஜாதி, மதப் பாகுபாடின்றி நல்லாட்சி நடத்தும்படியும் மோடியிடம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கூறியதாக செய்திகள் வந்தன.
அதை மறுத்த மோடி, "நான் ராஜ தர்மத்தைக் கடைபிடித்து வருவதாகவே வாஜ்பாய் குறிப்பிட்டார்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "முன்னாள் பிரதமரிடம் ஒரு பாஜக முதல்வர் ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். ராஜ தர்மத்தைக் கடைபிடிக்கும்படி ஒரு முறை அந்த முதல்வர் அறிவுறுத்தப்பட்டார்' என்று மோடியை மறைமுகமாக விமர்சித்தார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து மோடி விமர்சனம் செய்ததையடுத்து, மேற்கண்டவாறு பிரதமர் கூறியிருந்தார்.
மேலும், குவாலியரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசும்போது, "ராஜ தர்மத்தைக் கடைபிடிக்கும்படி வாஜ்பாய் ஒருபோதும் என்னை வற்புறுத்தவில்லை, மாறாக பாராட்டினார்' என்றார்.
வாஜ்பாய்-மோடி இடையேயான அந்த உரையாடல்தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment