16.12.13

காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்டம்



மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுக்குழுவில் அவர் மேலும் பேசியது:
பொதுக்குழுவில் காலையில் இருந்து பேசிய அனைவரும் நரேந்திர மோடி மீது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். ஆனால் எனக்கோ (கருணாநிதி), அன்பழகனுக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த ஈர்ப்பு ஏற்படவில்லை.
நரேந்திர மோடிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம். அந்த விளம்பரங்களையே பார்த்து நீங்கள் (திமுகவினர்) அதிர்ச்சி அடைந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
வாஜ்பாயோடு முடிந்துவிட்டது: பாஜகவுடன் நாம் கூட்டணி வைக்காதவர்கள் இல்லை. வாஜ்பாய் போன்ற மாபெரும் தலைவர்கள் இருந்தபோது பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். அமைச்சரவையில் இடம்பெற்றோம்.
கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் வைக்க வேண்டும் என்று வாஜ்பாயிடம் கேட்டோம். அப்போது வாஜ்பாய் அருகில் இருந்த அதிகாரிகள், கடற்கரை அருகில் வைப்பதால் இயற்கை சூழல் பாதிக்கப்படும். அதனால் அங்கு வைக்க வேண்டாம் என்று கூறினர்.
ஆனால் காமராஜருக்கு அந்த இடத்தில் வைப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்தினோம். அதை வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார். அப்போது இருந்தது மனிதாபிமான பாஜக தலைமை. தற்போது அப்படிப்பட்ட பாஜக இல்லை.
ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு யார் தலைவர் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை வாஜ்பாயோடு பாஜகவின் வரலாறு முடிந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை.
நன்றிகெட்ட காங்கிரஸ்: இப்படிக் கூறுவதால் காங்கிரஸýடன் கூட்டணி என்று நினைத்துவிடாதீர்கள். ஜீரோ ஜீரோ என்று ஏகப்பட்ட ஜீரோக்களைப் போட்டு அலைக்கற்றை ஊழலில் திமுக ஈடுபட்டதாக காங்கிரஸ் நம்மைச் சிக்க வைத்தது.
ராசா, கனிமொழி ஆகியோரை சிறையிலடைத்தனர். அந்தக் காயம் நீங்கா வடுவாக நம் மனதில் உள்ளது.
இது தனிப்பட்ட ராசாவுக்கு ஏற்பட்ட காயம் இல்லை. திமுகவுக்கே ஏற்பட்ட காயமாகும்.
சிபிஐ யார் கையில் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் அறிவோம்.
எனவே, நன்றிகெட்ட காங்கிரúஸாடு மீண்டும் கூட்டணி அமைக்கமாட்டோம். தனித்தே கூட போட்டியிடுவோம். ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தனித்து நின்றாலும் வெற்றிபெற முடியும்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவிடம் உங்கள் (திமுகவினர்) கருத்துகளைத் தெரிவியுங்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதையெல்லாம் அந்தக் குழுவினர் முடிவு செய்து கூறுவர் என்றார் கருணாநிதி.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் கருணாநிதி, க.அன்பழகனுக்கு வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பொதுக்குழுவில் பேசிய பலரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடலாம்; காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் கூட்டணி வேண்டாம் என்று திருச்சி சிவா, கே.என்.நேரு, பழனி மாணிக்கம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
ஒரு சில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல; பா.ஜ.க.வுடனும் கூட்டணி வேண்டாம். நடிகர் (விஜயகாந்த்) கட்சி நமக்கு மரியாதையே தருவதில்லை. எனவே அந்தக் கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். 1989 தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவியது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திமுக அமோக வெற்றிபெற்றது. எனவே அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment