16.12.13

கொடைக்கானலில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு: குடியிருப்பவர்கள் அச்சம்

கொடைக்கானலில் பாறைகளை வெடிவைத்து தகர்த்தி வருவதால் குடியிருப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானலில்  விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு அதில் காட்டேஜ்களும், அடுக்குமாடிக் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் கட்டுவதற்கு அடித்தளத்திற்கு கருங்கற்கள் பயன்படுத்துவதால் நிலப்பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
 கொடைக்கானல், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், பச்சைமரத்துஓடை, வில்பட்டி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், குருசடி மெத்து, வடகவுஞ்சி, பள்ளங்கி, செண்பகனூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாறைகள் வெடிவைத்து உடைக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் பாறைகளை உடைக்கக் கூடாது கட்டடங்கள் கட்டுவதற்கு வெளியிடங்களிலிருந்து தான் கருங்கற்கள் கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டும் அதை யாரும் பின்பற்றவில்லை. இரவு பகலாக பாறைகள் வெடிவைத்து உடைக்கப்பட்டு வருகின்றன.
 இதனால் அப் பகுதியில் குடியிருப்பவர்கள் அச்சமுடன் வசித்து வருகின்றனர். அருகிலுள்ளவர்களின் வீடுகளும் பாதிப்படைந்து வருகின்றன. தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணியை யாரும் கண்டு கொள்வளவில்லை. இதனால் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  மேலும் பாறைகளை வெடிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை அங்கே விட்டுச் செல்கின்றனர். அவற்றை பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் பெரும் அபாயம் நிலவுகிறது.
 ஏற்கெனவே கொடைக்கானலில் அனுமதியில்லாமல் போர்வெல் அமைப்பது, கம்பரசர் பயன்படுத்துவது, பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துவது, வெடி வைத்து பாறைகள் உடைப்பது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி கொடைக்கானலில் தொடர்ந்து இப்பணிக்ள நடைபெற்று வருகின்றன.  இதற்கு வருவாய் கோட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதியில் புவியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்வதில்லை. இதனால் கனிம வளங்கள் பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால் பருவ நிலை மாற்றம் உருவாகிறது. சரியான காலத்தில் மழை பெய்வதில்லை.  வெடி மருந்துகள் விற்கும் கடைகளில் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்கள் காப்பாற்றப்படும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.

No comments:

Post a Comment