16.12.13

நல்லெண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகம்

நல்லெண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  கடந்த மாதம் லிட்டருக்கு ரூ. 215 ஆக இருந்த சாதா ரக நல்லெண்ணெய்,  தற்போது லிட்டர் 250 ரூபாயை தாண்டியுள்ளது. லிட்டர் ரூ. 235 ஆக இருந்த தும்பை ரக நல்லெண்ணெய் தற்போது ரூ. 265-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.     ஒரே மாதத்தில் ரூ. 30 வரையில் விலை அதிகரித்து இருப்பது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.    நல்லெண்ணெய் விலை கூடிக்கொண்டிருந்த போதும் பாமாயில், சூரியகாந்தி, தேங்காய், கடலை, ரைஸ்பிரான் எண்ணெய்களின் விலைகளில் குறிப்பிடும்படியான மாற்றமில்லை.
  இது குறித்து, எண்ணெய் வியாபாரிகளிடம் கேட்டபோது, எள் விலை இரு மடங்காக உயர்ந்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 5 மாதங்களுக்கு முன் கிலோவுக்கு ரூ. 55 ஆக இருந்த எள், தற்போது ரூ. 110 ஆக உயர்ந்துவிட்டது. மோசமான பருவநிலை மற்றும் மழை காரணமாக கர்நாடகம், மேற்குவங்கம், குஜராத் போன்ற மாநிலங்களில் எள் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டதாலும், நல்ல எள் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், நல்லெண்ணெய் விலை உயர்ந்திருப்பதாக, வியாபாரிகள் கூறினர்.   இந்த நிலையில் மாற்றம் ஏற்பட இன்னும் நான்கைந்து மாதங்கள் ஆகும். அதுவரையில் மேலும் விலை உயரக்கூடும் என்றனர்.

No comments:

Post a Comment