16.12.13

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 16,863 பேருக்கு சிகிச்சை

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 16,863 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ.37.07 கோடி செலவளிக்கப்பட்டுள்ளதாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏழை, நடுத்தர மக்களுக்கும் உயர்தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் கீழுள்ள ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம், குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையும் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சைப் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை, இருதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரகம், நரம்பு மண்டல நோய்கள், கண்நோய், இரப்பை, குடல் நோய்கள் உள்பட 1016 நோய்களுக்கும், 113 தொடர் சிகிச்சை வழி முறைகள், 23 நோய் கண்டறிதல் முறைகளுக்கும் இலவச சிகிச்சைப் பெறலாம்.
தவிர, நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் முதல்நாள், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பும் 5 நாள்களுக்கும் செய்யப்படும் பரிசோதனைக் கட்டணங்களும், செலவினத் தொகையும் இந்தத் திட்டத்திலேயே வழங்கப்படுகிறது.
இந்த விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 16,863 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசு சார்பில் ரூ.37.07 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், அறிதல் கண்டுபிடிப்பு மூலமாக மட்டும் 1202 பயனாளிகளுக்கு ரூ.14.41 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நாமக்கல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறியது: இந்தத் திட்டத்துக்காக மாவட்டத்தில் இதுவரை 3,34,781 பயனாளிகளுக்கு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் 24 தனியார் மருத்துவமனைகளில் விரிவான காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
ஏழைகள் பயன்பெறுவதில் சிரமம்:
எனினும், பல நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் பணியர்த்தப்பட்டுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களால் பயனாளிகளின் சந்தேகங்களுக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்படாத சூழல் நிலவுகிறது.
இதன்காரணமாகவே கிராமப்புற ஏழை குடும்பத்தினர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதில் மிகுந்த சிரமம் கொள்ளும் நிலையும் இருந்து வருகிறது.
எனவே, காப்பீட்டுத் திட்ட மைய ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும், சந்தேகங்களுக்கு மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனுக்குடன் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்திட வேண்டும். இதன்மூலம், தகுதியான பயனாளிகள் திட்டத்தில் சிகிச்சைப் பெற முடியாமல் விடுபடுவது தவிர்க்கப்படும் என்று சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment