16.12.13

கென்ய சுதந்திர தின விழாவில் தாக்குதல்: 13 பேர் சாவு

கென்யாவில் ஒரு வாரம் கொண்டாடப்பட்ட 50ஆவது சுதந்திர தின விழாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் மீது நிகழ்ந்த முதல் தாக்குதல் இதுவாகும்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சுதந்திர தின பொன்விழாவை உள்நாட்டின் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அரசு தரப்பிலும், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் உற்சாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே, விழாக்கள் நடைபெற்ற பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சோமாலியாவில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அந்நாட்டு அரசுக்கு உதவியாக கென்யா தனது ராணுவத்தை அனுப்பியிருந்தது.
இதன் எதிரொலியாக அல்-காய்தா தொடர்புடைய ஷேபாப் தீவிரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
குறிப்பாக சோமாலியா எல்லையை ஒட்டிய கென்யாவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல்கள் அதிக அளவில் நிகழ்ந்திருக்கிறது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் கடந்த செவ்வாய்க்கிழமை காரிஸ்ஸா பிராந்தியத்தில் 5 போலீஸார் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் காணாமல் போய்விட்டார். வெள்ளிக்கிழமை வாஜிர் நகரில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர்.
பேருந்து மீது சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் என இந்த வாரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, மோம்பஸா பகுதியில் சென்று கொண்டிருந்த பிரிட்டன் சுற்றுலா பேருந்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டது. ஆனால் அந்த குண்டு வெடிக்கவில்லை என்று மேற்கத்திய நாடுகளின் பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment