16.12.13

லடாக்கில் சீனா அத்துமீறல்: 5 இந்தியர்கள் சிறைபிடிப்பு; பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவிப்பு



லடாக் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த இந்தியர்கள் 5 பேரை, அத்துமீறி ஊடுருவி வந்து சீனப் படையினர் பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி வந்து, இந்தியர்களை சீனப் படையினர் பிடித்துச் சென்றது இதுவே முதன்முறையாகும்.
லடாக்கின் சுமர் பகுதியில் இந்தியர்கள் 5 பேர், தங்களது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்தியப் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரம் சீனப் படையினர் ஊடுருவி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இந்தியர்கள் 5 பேரையும், அவர்களின் கால்நடைகளையும் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள முகாமுக்கு பிடித்துச் சென்றனர்.
இதுபற்றிய தகவலின்பேரில் 5 பேரையும் விடுவிக்க இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க கொடி அமர்வுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்தப் பிரச்னை உயர்நிலை அளவில் எடுத்து செல்லப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாங்கள் பிடித்துச் சென்ற இந்தியர்கள் 5 பேரையும் சீனப் படையினர் விடுவித்து விட்டனர். சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகள் இடையேயும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தநிலையில் இந்தியர்களை சீனப் படையினர் பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment