16.12.13

"செம்மொழித் தகுதிக்குப்பின் சங்க இலக்கிய ஆய்வு வலுப்பெற்றுள்ளது'

செம்மொழித் தகுதிக்குப் பிறகு தமிழில் சங்க இலக்கிய ஆய்வுகள் வலுப்பெற்றுள்ளது என்று, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மு.பாண்டி தெரிவித்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து "சங்க இலக்கிய ஆய்வுகளின்வழி ஆய்வு நெறிமுறைகள்' என்ற தலைப்பில் பயிலரங்கத்தை அந்தக் கல்லூரியில் நடத்தி வருகின்றன.
இதன் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மு.பாண்டி, "எட்டுத்தொகை அக இலக்கிய ஆய்வுகள்' என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்.
அப்போது அவர் பேசியது:
சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், தமிழ்ச் சங்கங்களில் அரங்கேற்றம், உரையாசிரியர்களின் விளக்கம், உ.வே.சா முதல் சேகரிப்பு, அச்சுப் பதிப்புப் பணி, தொடக்கக் கால திறனாய்வு, மதிப்பீடுகள் ஆகியவையே தமிழ்ச் செம்மொழி தகுதி பெற்றிட அடித்தளமாக அமைந்தவையாகும்.
பல்கலைக்கழங்களில் மு.வரதராசன், வா.சுபமாணிக்கம், தமிழண்ணல் போன்ற ஆரம்பகால ஆய்வாளர்கள் சங்க அக இலக்கியங்களின் உள்ளடக்கக் கூறுகளான இயற்கை, முதல், கரு, உரிப்பொருள், திணை, துறை, கூற்று, உள்ளுறை, இறைச்சி, யாப்பு பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
பின்னர் சில கோட்பாடுகளை உளவியல், சமூகவியல், அமைப்பியல் நிலைகளில் புகுத்திப் பார்க்கும் ஆய்வுகள் வந்தன. பிறகு சங்க அகப் பாடல்களில் விளிம்புநிலை மக்கள், பெண்ணியம், ஆளுமை, மேலாண்மை போன்ற ஆய்வுகளும் நிகழ்ந்துள்ளன. செம்மொழித் தகுதிக்குப் பிறகு சங்க இலக்கிய ஆய்வுகள் மேலும் வலுவடைந்து வருகிறது என்றார் அவர்.
தொடர்ந்து, "சங்க இலக்கியங்களில் நாட்டுப்புறக்கூறுகள்' எனும் தலைப்பில் செல்வம் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் க.சக்திவேல் பேசியது:
சங்க இலக்கியங்களை நாட்டுப்புற வடிவில் பார்த்தால் அவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். பண்டைய மக்களின் பண்பாடு, கலாசாரம், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. அவை இப்போதுள்ள நகர வாழ்க்கை முறை இலக்கியங்களில் இல்லை.
மருத நிலத்தில் தலைவன், தலைவன் ஊடல் கொள்ளும் நிலை, அவர்களின் புழங்கு பொருள்கள், காதல், திருமண முறை ஆகியவை நாட்டுப்புற வழக்காறுகளின் தொட்டில்களாக உள்ளன. அக, புற ஆகிய இரு இலக்கியங்களிலும் ஒழுக்கங்களைக் கடைப்பிடித்துள்ளனர். அவை தற்போது வரை மரபாகப் பின்பற்றப்படுகிறது.
புற இலக்கியங்களைவிட அக இலக்கியங்களில்தான் நாட்டுப்புறக்கூறுகள் மிகுந்துள்ளன. நாட்டுப்புறங்களில் மறைமுகமாகச் சொல்லும் வழக்கங்களை சங்கப் புலவர்கள் இறைச்சி, உள்ளுறை போன்ற இலக்கியச் சுவைகளோடு கூறியுள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment