28.12.13

குஜராத் பெண்ணை உளவு பார்த்த விவகாரம்: வலுக்கிறது காங்கிரஸ், பாஜக கருத்து மோதல்


குஜராத்தில் பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, மத்திய அரசு அமைக்கும் விசாரணை ஆணையம் தொடர்பாக காங்கிரஸ், பாஜக இடையே கருத்து மோதல் வலுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தனது வலைதளத்தில் வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது:
குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்க, நரேந்திர மோடி அரசால் நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணைக் காலமான 4 மாதங்களையும் தாண்டி, 11 வருடங்கள் எடுத்துக் கொண்ட பிறகும் அந்த ஆணையம் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
பெண்ணை உளவு பார்த்த விவகாரத்துக்காக குஜராத் அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையமும் இதே நிலையைச் சந்திக்கும்.
இந்த விவகாரத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டம், தந்திச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவை மீறப்பட்டுள்ளன. அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையும் மீறப்பட்டுள்ளதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.
மாநில அரசால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தாலும், பொது நலன் கருதி விசாரணை ஆணையம் அமைக்க, விசாரணை ஆணைய சட்டத்தின் பிரிவு 3, மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கிறது.
தரம் தாழ்ந்த அரசியல்: இதனிடையே, விசாரணை ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், "காங்கிரஸ் தரம் தாழ்ந்த அரசியலில் இறங்கியுள்ளது' என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:
இந்த விசாரணை ஆணையம் அமைக்கும் நடவடிக்கை மாநிலங்களை அவமானப்படுத்துவதாகும். அவற்றின் அதிகார வரம்புக்குள் அத்துமீறி தலையிடும் செயலாகும்.
நான்கு மாநில தேர்தலில் தோல்வியுற்றதால், மோடியை பழிவாங்கும் நோக்கில் காங்கிரஸ் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று ரமண் சிங் கூறியுள்ளார்.
விசாரணை ஆணையம் அவசியமே: பாஜகவின் புகாரை மறுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஷகில் அகமது டுவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
மோடியின் கட்டளையின் பேரில், குஜராத் மாநிலத்துக்குள்ளாக மட்டுமல்லாமல் அந்த மாநிலத்துக்கு வெளியிலும் அந்தப் பெண் உளவு பார்க்கப்பட்டுள்ளார். எனவே மத்திய அரசால் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது அவசியமே என்று ஷகில் அகமது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment