28.12.13

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் லோக் ஆயுக்த

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

"காங்கிரஸ் ஆளும் 12 மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் "லோக் ஆயுக்த' அமைக்க வேண்டும்' என்று தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். காங்கிரஸ் ஆட்சி ஆளும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அருணாசலப் பிரதேச முதல்வர் நபம் துகி, மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகாலயா முதல்வர் முகுல் சங்மா, மிசோரம் முதல்வர் பூ லால்தன்ஹாவ்லா, மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, சுஷீல் குமார் ஷிண்டே, ப. சிதம்பரம், கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ், இணை அமைச்சர்கள் கே.வி. தாமஸ், நாராயணசாமி ஆகியோரும், மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜய் சிங், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
15 நிமிட வாய்ப்பு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை மத்தியிலும், லோக் ஆயுக்த சட்டத்தை மாநிலங்களிலும் நிறைவேற்றுவது ஆகியவை குறித்துப் பேசுவதற்கு ஒவ்வொரு முதல்வருக்கும் தலா 15 நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டன. பின்னர் முதல்வர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் அதிர்ச்சி அளிக்கும் தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது. அதைக் கண்டு துவளாமல், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முதல்வர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
லோக் ஆயுக்த: இக் கூட்டத்தின் முடிவில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"விலைவாசி உயர்வைத் தடுக்கவும், மத்தியில் லோக்பால் போல மாநிலத்தில் "லோக் ஆயுக்த' அமைக்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைக்க 2014, பிப்ரவரி 28-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிராக வலுவான செயல்திட்டம் தேவை எனத் திரும்ப, திரும்ப நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஊழலை ஒழிக்க "லோக்பால், லோக் ஆயுக்த சட்டங்களால் மட்டும் முடியாது. அதுபோல மேலும் பல மசோதாக்கள் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கிடப்பில் உள்ளன. அவற்றை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவும் தயங்கக் கூடாது. ஆனால், இந்த விஷயத்தில் குரல் கொடுக்க மட்டுமே செய்யும் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளும் போது பின்வாங்கிவிடுகின்றன. எனவே, இந்த விஷயங்களை இனி பேசிக் கொண்டிருக்காமல், செயலில் காட்ட முன்னுரிமை அளித்துச் செயல்படுவோம்' என்றார் ராகுல் காந்தி.
உணவுப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்போர், பதுக்கல்காரர்கள் உள்ளிட்டோர் மீது எஸ்மா (அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டம்) சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும், காய்கறிகள், பழ வகைகள், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு வெளிப்படையாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச நடவடிக்கைகளை செயல்படுத்த காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆதர்ஷ்: அறிக்கையை நிராகரித்தது சரியல்ல
ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிககையை மகாராஷ்டிர அரசு நிராகரித்தது சரியல்ல என்று ஆட்சேபம் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி "ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் இருக்கிறது' என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஒரு செய்தியாளர், "காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரத்தில் ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் மூன்று முதல்வர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
அந்த விவகாரம் குறித்து அந்த மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.ஏ. பாட்டீல் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்து விட்டது.
இவ்வாறு கட்சியைச் சேர்ந்த தலைவர்களைக் காக்கும் அணுகுமுறையுடன் உள்ள காங்கிரஸால் எவ்வாறு ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியும்?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசுகையில், "ஆதர்ஷ் குடியிருப்பு விவகாரத்தில் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்த மகாராஷ்டிர அரசின் நடவடிக்கையில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.
அந்த முடிவை மறுபரிசீலனை செய்து அறிக்கையை ஏற்க வேண்டும் என மகாராஷ்டிர அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் யாரையும் காப்பாற்ற காங்கிரஸ் முயலவில்லை' என்றார்.

No comments:

Post a Comment