28.12.13

மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் சுயேச்சை எம்.பி.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை மக்களவை உறுப்பினர் ஓம் பிரகாஷ் யாதவ் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றார்.
அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் ஆதரவை வாபஸ் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் அளித்ததாக, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஓம் பிரகாஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கடிதத்தின் நகல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ள நிலையில், அதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஓம் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாகப் பேசிவரும் ஓம் பிரகாஷ், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை "சக்தி வாய்ந்த தலைவர்' என்றும், தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற தைரியமான தலைவர்தான் நாட்டுக்குத் தேவை என்றும் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக மூத்த தலைவர் ஒருவருடன் ஓம் பிரகாஷ் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment