28.12.13

தற்போதைய செய்திகள் சிதம்பரத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி முழுமை பெறாததால் பொதுமக்கள் அவதி

சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி முழுமை பெறாததால், ஆதார் அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆதார் அட்டை இருந்தால் கேஸ் இணைப்பிற்கு மானிய விலையில் சிலிண்டர் என கேஸ் ஏஜென்சிகள் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் கிடையாது என கேஸ் ஏஜென்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி முழுமை பெறாமல் உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏனென்றால் கடந்த 6 மாதங்கள் முன்பு நகரில் வார்டு வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும் குறிப்பிட்ட தேதிகளில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. அன்றைய தினம் ஊரில் இல்லாதவர்கள் படம் எடுக்க முடியாமல் போனது. இதனால் சிதம்பரம் வட்டத்தில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்காமல் உள்ளனர்.
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க கடலூர் மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுக்கும் பணி முழுமை பெற்றுள்ளது. ஆனால் சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இதுவரை சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே புகைப்படம் எடுத்தவர்கள் பாதி பேருக்கு ஆதார் அட்டை வரவில்லை. உதாரணமாக ஒரு வீட்டிற்கு 5 பேர் என்றால், 2 பேருக்குதான் ஆதார் அட்டை தபாலில் வந்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு வரவில்லை.
எனவே சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் அமைத்து மீதமுள்ளவர்கள் புகைப்படம் எடுத்து ஆதார் அட்டை பெற கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment