28.12.13

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: சல்மான் குர்ஷித் உறுதி


தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழக மீனவர்கள். உடன் திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, ஏ.கே.எஸ். விஜயன்.

"இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் தன்னைச் சந்தித்த தமிழகத்தின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதியை அளித்தார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், அத் துறை உயரதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்துவதற்காக புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ந. கௌதமன், ஆ. சேகர், மு. முத்து, மு. முருகன், கோ. மனோகரன், ரா. தக்ஷிணாமூர்த்தி, செ. சுரேஷ், செ.ஆறுமுகம், க. செந்தில் ஆகியோர் வியாழக்கிழமை இரவு தில்லி வந்தனர்.
அவர்களை நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை சல்மான் குர்ஷித்திடம் அழைத்துச் சென்றனர். அப்போது, இலங்கைக் கடற்படையின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் நிலை கேள்விக்குரியாகியுள்ளது என்றும், கடலில் மீன் பிடிக்கவே அச்சப்படுவதாகவும் மீனவர்கள் கூறி வேதனை தெரிவித்தனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் பகுதி மீனவர்களை தாமதமின்றி விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர். பாலு கூறுகையில், "கடந்த மூன்று மாதங்களாக இலங்கை சிறையில் 200-க்கும் மேற்பட்ட தமிழக, புதுச்சேரி மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 77 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும், நீடித்து வரும் இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் நிரந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சல்மான் குர்ஷித்திடம் கேட்டுக் கொண்டோம்' என்றார்.
நடவடிக்கைக்கு குர்ஷித் உறுதி: இதைத் தொடர்ந்து, சல்மான் குர்ஷித் கூறியது: "இந்திய-இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்னையை அவர்களின் வாழ்வாதாரம், மனிதாபிமானம் என்ற கோணத்தில் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட இரு நாட்டு மீனவர்களும் தங்களுக்குள்ளாகப் பேசி ஒரு தீர்வுக்கு வந்தால்தான், இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். கடந்த காலங்களிலும் இரு தரப்பு மீனவர்கள் பேசியுள்ளனர். இடையில் நின்றுபோன அப் பேச்சுவார்த்தை நடவடிக்கை மீண்டும் தொடங்க தற்போது இரு தரப்பும் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசு உள்பட அனைவரும் இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு நடைபெற ஒத்துழைக்கின்றனர்.
இது அரசியல் கடந்து நிலவும் மனிதாபிமான பிரச்னையாகும். எனது நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடன் பேசி ஜனவரியில் இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மீனவர்கள் இந்தியாவிலும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். எனவே, பரஸ்பரம் இரு தரப்பு மீனவர்களையும் விடுவிக்கும் வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இது தமிழக மீனவர்கள் என்று இல்லாமல் இந்திய மீனவர்கள் என்ற கோணத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்னை. அந்த வகையில், இந்தியக் குடிமக்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அதற்கான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் சல்மான் குர்ஷித். இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தமிழக ஊடவியலாளர் தமிழ் பிரபாகரனை விடுவிப்பது குறித்து கேட்டதற்கு, "சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடந்துவிடுகிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றார் சல்மான் குர்ஷித்.

"ஜனவரி 20-இல் பேச்சுவார்த்தை'
இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாக புதுச்சேரியில் உள்ள தேசிய மீனவர் பேரவை பொதுச் செயலர் எம். இளங்கோ தெரிவித்தார்.
தமிழக-புதுச்சேர் மீனவர்களை விடுவிக்கக் கோரி இளங்கோவும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் ஐயரும் சல்மான் குர்ஷித்தை வெள்ளிக்கிழமை மாலையில் சந்தித்தனர்.
அப்போது, "கடல் தாண்டி வந்ததாகக் கைது செய்யப்பட்டு இந்திய-இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களையும் பரஸ்பரம் விடுவிக்க இந்தியாவும் இலங்கையும் திட்டமிட்டுள்ளன. அதன்படி, ஜனவரி 20-ஆம் தேதி இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சல்மான் குர்ஷித் கூறினார்' என்று இளங்கோ பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment