28.12.13

பாதுகாப்பு சலுகை குறைப்பு எதிரொலி: நேபாள பயணத்தை ரத்து செய்தார் அமெரிக்கத் தூதர்

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைதுக்கு பதிலடியாக, விமான நிலையங்களில் அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு பரிசோதனைச் சலுகைகளை இந்தியா குறைத்ததன் காரணமாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் தனது நேபாளப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
பாதுகாப்பு சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்குச் செல்லும் போது, விமான நிலையத்தில் சாதாரண மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடத்தப்படும் என்பதால் அவர் இந்தப் பணத்தை ரத்து செய்திருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்சி பாவெலின் நேபாளப் பயணத்தின் விவரங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அமெரிக்கா தெரிவித்து, அவருக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு அங்கீகாரம் குறித்து கேட்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது, அமெரிக்கர்களுக்கு இந்தியா வழங்கிய அடையாள அட்டைகள் கடந்த 19ஆம் தேதி திரும்பப் பெற்ற போதே பாதுகாப்புச் சலுகைகளும் முடிந்துவிட்டன என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அவகாசம் கேட்கிறது அமெரிக்கா: இதனிடையே, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள விவரங்களை தெரிவிக்க விடுக்கப்பட்ட கெடு கடந்த 23ஆம் தேதியுடன் முடிந்துவிட்ட போதிலும், அமெரிக்கா இதுவரை அந்த விவரங்களை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக ஊழியர்கள் விடுமுறையில் சென்ற காரணத்தால் கூடுதல் அவகாசம் தேவை என்று அமெரிக்கா கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment