28.12.13

மூன்று ஆண்டு மருத்துவப் படிப்பு விரைவில் தொடக்கம்

கிராமங்களில் மருத்துவர்கள் பணி செய்வதற்கு வசதியாக மூன்று ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
பெங்களூரு விகாஸ் செüதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில சுகாதாரத் துறையின் வளர்ச்சிப் பணிகளின் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கிராமப் பகுதிகளுக்கு பணி செய்ய பெரும்பாலான மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர். இதனால், கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர காலத்தில் உரிய சிசிச்சை கிடைப்பதில்லை.
இதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகள்   கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மூன்று ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து, விரைவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கிராமங்களில் வசிப்பவர்கள் நகரங்களுக்கு குடியேறுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது மருத்துவம் சார்ந்த பிரச்னைகளே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கிராமங்களில் மருத்துவச் சேவைகளை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கு மருத்துவச் சேவைகளுக்காக ரூ. 1.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மருத்துவச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. பேறு காலத்தில், குழந்தைகள் இறப்பைத் தடுப்பதில் கர்நாடகம் 2-ஆம் இடத்தில் உள்ளது.
தாய்கள் இறப்பைத் தடுப்பதில் 5 மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக உள்ளது. 25 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனைகளைத் தொடங்க மாநில அரசு அனுமதி கோரியுள்ளது. அதற்கு அனுமதி வழங்கப்படும்.
அனைத்து மக்களுக்கும் சிகிச்சை பெறும் வகையில் மாநில அரசு ராஜீவ் காந்தி சுகாதாரத்  திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கர்நாடகத்திற்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றார் குலாம்நபி ஆசாத்.

No comments:

Post a Comment