25.12.13

எல்லையில் அமைதி: இந்திய-பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் உறுதி

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வாகா-அட்டாரி எல்லைப்பகுதிக்கு வந்த இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியாவை வரவேற்கும் பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் ஆமீர் ரியாஸ்.



இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியுடன் செயல்படுத்த இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.
14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ) அளவிலான பேச்சுவார்த்தை, வாகா எல்லையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா மற்றும் பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் ஆமீர் ரியாஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்தைக்குப் பின் வினோத் பாட்டியா கூறியதாவது:
உளப்பூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற்ற எங்களது பேச்சுவார்த்தை மிகவும் பலனுள்ளதாக அமைந்திருந்தது.
கட்டுப்பாட்டு எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தும், அமைதியை நிலைநாட்டுவதற்கு தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும் வழிமுறைகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம்.
இறுதியாக, எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாக செயல்படுத்துவது எனவும், அதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகளை மேலும் செம்மைப்படுத்துவது எனவும் இருவரும் முடிவு செய்தோம் என்று லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா தெரிவித்தார்.
கடந்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் நியூயார்க்கில் சந்தித்த போது, தடைப்பட்டிருந்த டிஜிஎம்ஓ-க்களிடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவானதையடுத்து, இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
டிஜிஎம்ஓ-க்கள் மட்டுமின்றி, இரு தரப்பிலிருந்தும் ஒரு பிரிகேடியர் மற்றும் மூன்று லெப்டினன்ட் கர்னல்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment