25.12.13

தேவஸ்தானம் வெளியிட்ட ஏழுமலையான் தரிசன விவரங்கள்



புத்தாண்டை முன்னிட்டு, திருமலை ஏழுமலையானின் தரிசன விவரங்களை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.
ஜனவரி 1 புத்தாண்டு தினம், 11 வைகுண்ட ஏகாதசி மற்றும் 12 துவாதசி தினத்தன்று, ஏழுமலையானை தரிசிக்கும் வழிமுறைகளை, தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: திருமலையில், ஜனவரி 1 மற்றும் 11-ஆம் தேதி, விஐபிகள் நள்ளிரவு 1 மணிக்கு பின்பே, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
தரிசனத்துக்கும், தங்கும் அறைகள் பெறவும், அடையாள அட்டை கட்டாயம் தேவை. விஐபி ஒருவருடன், 6 பேர் மட்டுமே தரிசனத்துக்கு, அனுமதிக்கப்படுவர்.
மேற்கண்ட 3 தினங்களிலும், தரிசனத்துக்கும், வாடகை அறைகள் பெறவும், விஐபிக்களின் பரிந்துரை கடிதங்கள், ஏற்கப்பட மாட்டாது. ஒருவருக்கு, ரூ.1000 செலுத்தி வி.ஐ.பி.க்கள், தரிசன டிக்கெட்டை பெற வேண்டும். அதே போல், தங்கும் அறைகளின் முன்பதிவும், நன்கொடையாளர்களுக்கு மட்டும், ஒருவருக்கு 1 அறை என, 5 நாள்களுக்கு முன் வழங்கப்படும்.
தர்ம தரிசன பக்தர்கள், மாலை 5 மணிக்கு பின்னரே, டிசம்பர் 31-ஆம் தேதி மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி, எம்.பி.சி. 26 அருகில் உள்ள க்யூ வரிசையில், மறுநாள் தரிசனத்துக்காக, அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 1-ஆம் தேதி, 20 ஆயிரம் பக்தர்களுக்கும், ஜனவரி 11-ஆம் தேதி 22 ஆயிரம் பக்தர்களுக்கும், ஏழுமலையானின் தரிசனம் வழங்கப்படும். திருப்பதி அலிபிரியிலிருந்து, பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், டிச.31 நள்ளிரவுக்கு பின்னும், வைகுண்ட ஏகாதசி அன்று மதியம் 2 மணிக்கும், நாராயணகிரி நந்தவனத்தில் உள்ள க்யூ வரிசையில், தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். மேலும், ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், இந்த 2 நாள்களும் காலை 6 மணிக்கே, க்யூ வரிசையில் அனுமதிக்கப்படுவர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், ஜனவரி 1-ஆம் தேதி 25 ஆயிரம் பேருக்கும், ஜனவரி 11-ஆம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், ஏழுமலையான் தரிசனம் அளிக்கப்படும்.
ஜனவரி 1-ஆம் தேதி தரிசனத்துக்காக, 4,800 ரூ.50 டிக்கெட்டுகள் முன்பதிவு மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது.
ஜனவரி 11-ஆம் தேதி ரூ. 50 சுதர்சன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 விரைவு தரிசனம், இந்த 2 நாள்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 12-ஆம் தேதி ரூ.300 தரிசனத்திற்காக, 5ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படும். வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையின் பெற்றோர் தரிசனங்களும், ஆர்ஜித சேவைகளும் இந்த 3 நாள்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பக்தர்களும், ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில், இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அனைவரும் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளித்து, ஏழுமலையானை மனம் குளிர, தரிசிக்க வேண்டும் என அவர் பக்தர்களை கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment