25.12.13

அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகள் குறைப்பு

இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு சலுகைகளை இந்தியா குறைத்துள்ளது. மேலும், அவர்களின் உறவினர்களுக்கு அளித்து வந்த பாதுகாப்பு சலுகைகளை முழுவதும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவின் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இந்திய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு விவகாரத்தில் என்ன சலுகை அளிக்கப்படுகிறதோ அதே சலுகைகளை இந்தியாவில் உள்ள அமெரிக்கா அதிகாரிகளுக்கும் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
தில்லி, சென்னை, மும்பை உள்பட நான்கு நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட தூதரக அடையாள அட்டைகளை திங்கள்கிழமைக்குள் திரும்ப அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாதாவது:
அமெரிக்க அதிகாரிகளுக்கு புதிய தூதரக அடையாள அட்டை வழங்கப்படுகின்றன. அதில், குறிப்பிட்ட பாதுகாப்பு சலுகைகள் மட்டுமே அவர்கள் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகள் கடுங்குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டாது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment