25.12.13

"மோடியை பிரதமராக்குவோம்' முழக்கத்துடன் தேர்தல் பிரசாரம்


பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம்' என்ற முழக்கத்துடன் தீவிர பிரசாரம் மேற்கொள்ள பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரசாரத் திட்டம்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பிரசார உத்தி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், "மத்தியில் ஆளும் காங்கிரஸýக்கு எதிரான அதிருப்தி அலை நாடு முழுவதும் வீசுகிறது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்கள், மக்கள் விரோதச் செயல்பாடுகள் குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும். இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் ஒத்துழைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
"மோடியை பிரதமராக்குவோம்': "மக்களவைத் தேர்தலில் 272 இடங்களுக்குக் குறையாமல் வெற்றி பெறும் உத்திகளை வகுக்க வேண்டும். பாஜகவின் அனைத்து தேசிய, மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான கூட்டம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்தப்படும். அதில் தேர்தல் செயல் திட்டங்கள், வேட்பாளர்களுக்கான தகுதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். மக்களவைத் தேர்தலையொட்டி, "நரேந்திர மோடியை பிரதமராக்குவோம்' என்ற முழக்கத்துடன் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும். பாஜக கூட்டணி அரசை மத்தியில் நிறுவ முனைப்புடன் செயல்பட வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
"ஒரு நோட்டு,ஒரு வோட்டு': இக் கூட்டம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக பொதுச் செயலர் அனந்த் குமார் கூறியது: "காங்கிரஸ் எதிர்ப்பலையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அரசை வீழ்த்தும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி மக்களிடம் நன்கொடை வசூலிக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி, "ஒரு நோட்டு, ஒரு வோட்டு' என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.1000 என பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்கப்படும். அதைக் கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பாஜக தீவிரமாக மேற்கொள்ளும்' என்றார் அனந்த் குமார்.
பாஜக முதல்வர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, அக் கட்சியின் மத்திய தேர்தல் பிரசார குழுக் கூட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment